பாலஸ்தீன மாணவர்களுக்கு வெ.11.48 மில்லியன் உபகாரச் சம்பளமா? -கெராக்கான் கேள்வி

நாட்டின் பிரசித்தி பெற்ற 12 பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிபை மேற்கொள்ள பாலஸ்தீன மாணவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் வழங்கும் என்று அண்மையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  முகமது அறிவித்தார்.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற இங்குள்ள மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கிடைக்காத நிலையில்   அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது குதிரைக்கு முன்புறம் வண்டியைப் பூட்டுவதற்கு சமமாகும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் சாடினார்.

பக்காத்தான் அரசாங்கம்  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குமேயானால்  பாலஸ்தீன  மாணவர்களுக்கு 11.48 மில்லியன் வெள்ளி மதிப்பிலான உபகாரச் சம்பளம் வழங்குவதை கெராக்கான் நிச்சயம் வரவேற்கும். ஆனால், நிலைமை அதற்கு நேர்மாறாக  உள்ளது என்றார் அவர்.

தற்போது ஆண்டுதோறும் அரசாங்க உபகாரச் சம்பளத்தைப் பெறும் சிறந்த மாணவர்களின் எண்ணிக்கை மன நிறைவளிக்கும் வகையில் இல்லை. பாலஸ்தீன மாணவர்களுக்கு 11.4 மில்லியன் வெள்ளி உபகாரச் சம்பளத்தை வழங்கும் ஆற்றலை அரசாங்கம் கொண்டிருக்குமேயானால்   இந்த அனுகூலத்தைப்  பெறும் உள்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அது அதிகரிக்க வேண்டும். நம் வசம் உள்ள குறைந்த அளவு வளத்தை நாம் ஏன் அந்நிய நாட்டு மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்று அவர் வினவினார்.

அதோடு,  நமது மாணவர்கள் அந்நிய நாட்டு மாணவர்களுக்குச்  சளைத்தவர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.நாட்டின் சிறந்த மாணவர்கள்  குறிப்பாக சீன மாணவர்களுக்கு  மெட்ரிகுலேஷன்  மற்றும் பொது பல்கலைக்கழகங்களில்  போதிய இடம் வழங்கப்படாததோடு அரசாங்க உபகாரச் சம்பளத்தைப் பெறுவதிலும் இவர்கள் பெறும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு  அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மாறாக, உள்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றை அந்நிய நாட்டு மாணவர்களுக்கு வழங்குவது  எள்ளளவும் நியாயமாகாது என்று டோமினிக் லாவ் சுட்டிக் காட்டினார்.

“பல நாடுகள் மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதை நான் அறிவேன். அது ஒரு பிரச்னை அல்ல.  ஆனால், உள்நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்  என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

அரசாங்கத்தின் தற்போதைய போக்கானது  நாட்டு மக்கள் துன்பப்படும் போது அந்நியர்களுக்கு நன்மை செய்வது போல்  உள்ளது. இது ஒரு நல்ல செயலாக இருந்த போதிலும், குடிமக்களின்  நலனே முதலில் காக்கப்பட வேண்டும் ” என்று  அறிக்கை ஒன்றின் வழி அவர் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மாணவர்களுக்கு 11.4 மில்லியன் வெள்ளி உபகாரச் சம்பளம் வழங்கும் வலிமையைக்  கொண்டுள்ள அரசாங்கம் உபகாரச் சம்பளம் பெறும் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  முன் வர வேண்டும் என்று டோமினிக் லாவ் கோரிக்கை விடுத்தார்.

Source: http://www.anegun.com/?p=32635

Search

Calendar

Top

Google+
Follow @partigerakan