கோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா? அரசாங்கத்திடம் கெராக்கான் கேள்வி

மெட்ரிகுலேஷன் கல்வியறிவு குறைந்த மலாய்க்கார மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது புதிய தகவல் அல்ல. இது நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது.

எனினும், மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கோட்டா முறையை மறுபரிசீலனை செய்யும்படி பல்வேறு தரப்பினர் பல காலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களின் குரல் ஒவ்வோர் ஆண்டும் மேலோங்கி வருவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உணர வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் கேட்டுக் கொண்டார்.

நியாயமான மற்றும் தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறை தேவை என்ற கோரிக்கையை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்றார் டோமினிக் லாவ்.

“மலாய்க்காரர் அல்லாதோருக்கு இதற்கு முன்பு குறைவான இடங்கள் வழங்கப்பட்டது ஒரு பிரச்னையாகக் கருதப்படவில்லை. இப்போது சில தரப்பினர் இதனை ஒரு பிரச்னையாக்கி வருகின்றனர் என்று டாக்டர் மகாதீர் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. இது தவறான கருத்தாகும். காலத்திற்குப் பொருந்தாத கொள்கையைத் தற்காத்துப் பேசும் இத்தகு செயலை ஒரு தற்காப்பு வாதமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

சில மலாய்க்காரர்கள் கூட மெட்ரிகுலேஷன் திட்டத்தில் காணப்படும் நியாயமற்ற கோட்டா முறை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு குறிப்பிட்ட தேர்வை மட்டுமே தகுதியாக்க வேண்டுமென்று கூறுகின்றனர். இதனை கெராக்கானும் வரவேற்கிறது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மெட்ரிகுலேஷன் திட்டத்தை ரத்து செய்வதோடு பல்கலைக்கழக நுழைவு தேர்வாக எஸ்டிபிஎம் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.

மெட்ரிகுலேஷன் கோட்டா முறை தொடரப்படுவது குறித்து ஜசெக தலைவர்களில் பலர் முன்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது ஒரு விவகாரம் அல்ல என்று டாக்டர் மகாதீர் முத்திரை குத்தக் கூடாது என்றார். அதே சமயம், இந்த விவகாரத்தில் ஜசெக தங்களின் மௌனத்தைக் கலைத்து பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவ அமைப்பு மற்றும் அரசாங்க நிர்வாகத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடளாவிய நிலையில் நடத்தப்படும் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது.

இதன் பொருட்டு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான நுழைவு நாட்டிற்குப் பயனளிக்கும். அதோடு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது கொள்கை வரைவு மற்றும் நிர்வாகத்தில் இன சார்ப்பற்ற அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

Source: http://www.anegun.com/?p=32188

Search

Calendar

Top

Google+
Follow @partigerakan